Wednesday, May 09, 2012

தி.நகர்

4 க‌மெண்ட்ஸ்
தி.நகர். சென்னையின் அனைத்து தேவதைகளும் சங்கமிக்கும் பூந்தோட்டம். பீஹார் - வேளச்சேரி. இவற்றிற்கெல்லாம் அஞ்சவே இல்லை. கொஞ்சம் கூட என்கவுண்டர் பயமின்றி, வருவோர் போவோரையெல்லாம், கடைக்கண் பார்வையிலேயே போட்டு தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் அழகான ராட்சசிகள். 

கிட்டத்தட்ட  ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த வாரம்தான் தி.நகர் செல்ல முடிந்தது. சம்மரை சமாளிப்பதற்காக அம்மாவுக்கும் பாட்டிக்கும், ஈரோடு காட்டன், இம்பீரியல் வகை புடவைகளை ஒவ்வொரு வருடமும் எடுத்துகொடுப்பதுண்டு. எப்போதும் போத்தீஸ்தான் முதல் மற்றும் ஒரே சாய்ஸ்.

ஆனால் இந்த வருடம் போத்தீஸ் கொஞ்சம் ஏமாற்றம்தான். அரை மணி நேரம் சுற்றியும் எதுவும் பிடிக்கவில்லை. எனவே குமரனில் எட்டி பார்த்தேன். இங்கும் மனதுக்கு திருப்தி அளிக்கவில்லை.  சுமார்தான். இரண்டு புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நடையை கட்டினேன்.

அடுத்து சென்னை சில்க்ஸ். நன்றாக இருந்தால் இங்கு எடுப்போம். இல்லையென்றால் ஊருக்கு செல்லும்போது அங்கேயே எடுத்துவிடலாம் என்று அரை மனதோடுதான் உள்ளே சென்றேன். ஆச்சரியம்! நிஜமாகவே அழகழகான டிசைன்கள். ஒவ்வொரு புடவையும் ஏறக்குறைய ரூ.300 ரேஞ்சுக்கு இருக்கிறது. அவ்வளவும் வொர்த். தரத்திற்கும் குறைவில்லை.

சென்னை சில்க்ஸ்காரர்கள் புத்திசாலிகள். உடல் குளிர ஜம்மென்று ஏஸியும், மனம் குளிர  கும்மென்று அனுஷ்கா ஸ்டில்லும் ஒட்டிவைத்து நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். காய்கிற வெயிலுக்கு, அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிகொண்டிருக்கலாம் போலிருந்தது. ஹும்ம்ம்...என்ன செய்ய? சில பல புடவைகளை அள்ளிக்கொண்டு கிளம்பினேன்.
  

தி.நகர் நொறுக்ஸ்

#பேருந்தைவிட ரயில்தான் வசதியாக இருக்கிறது. மாடி ரயிலில் பீச் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து மாம்பலம். சற்று வெயில் நேரத்தில் சென்றால் கூட்டமும் இருக்காது. பர்ஸுக்கும் பங்கம் இல்லை.

#வெயில் காலம் என்பதால் எல்லா ஜூஸ், ஐஸ்க்ரீம் கடைகளிலும் கூட்டம் அம்முகிறது. சில கடைகளில் இன்னமும் கண்ணாடி க்ளாசை ஜூஸுக்கு பயன்படுத்துகிறார்கள். இவற்றை கழுவுவதற்கு எந்தளவு அக்கறை காண்பிப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே, எந்தவித கலப்படமுமின்றி, சுத்தமான முறையில் இயற்கை தரும் இளநீர்தான் சாலச்சிறந்ததாக படுகிறது எனக்கு.

#தி.நகரில் மட்டும், "நடைபாதை" என்பதை "கடைபாதை" என பெயர்மாற்றம் செய்திட தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். முழுக்க முழுக்க கடைகள்தான். சாலையில்தான் நீங்கள் கண்டிப்பாக நடந்தாக வேண்டும். இந்த நடைபாதை வியாபாரிகள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். இல்லாவிடில், எப்போதோ நில ஆக்கிரமிப்பு வழக்கில் உள்ளே சென்றிருப்பர்.

#திடீரென்று ஏதாவது ஒரு சந்தில் இருந்து, ஒரு ஆட்டோவோ, ஹோண்டா ஆக்டிவாவோ உங்களை ஏறக்குறைய இடித்துவிடும் அளவுக்கு வந்து, ப்ரேக் போட்டு கிறீச்ச்ச்ச்ச்ச்ச்சும். ஓட்டுபவர், உங்கள் குலம், கோத்திரம் ஆகியவற்றை கேட்காமலேயே, கொஞ்சம் அர்ச்சனை செய்துவிட்டு செல்வார். இந்த அர்ச்சனை ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

#ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல இடங்களில் வெளியே ஸ்நாக்ஸ் அயிட்டங்களை விற்றுகொண்டிருக்கிறார்கள். ஈக்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் ரொம்ப ஃபேவரைட் போல. சும்மா, பறந்து பறந்து ருசித்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு அயிட்டத்தையும் வெளுத்து வாங்குகிறார்கள். யோவ், இப்படிலாம் இருந்தா பின்ன ஏன் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நீர்வன, பறப்பன, ஊர்வன காய்ச்சல்லாம் வராது?

இவ்வளவு பேர் கூடும் இடத்தில், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கோ, அவசர உதவிக்கோ போதுமான வசதிகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னதான், இது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், இங்கு கிடைக்கும் பல பொருட்கள் நாம் வசிக்கும் ஏரியாவிலேயே கிடைத்தாலும், இன்னும் தி.நகர் சலிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

Thursday, March 29, 2012

சென்னையில் ஒரு வெயில் காலம்

6 க‌மெண்ட்ஸ்
என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

முன்பெல்லாம், இந்த படம் போகலாமா, அந்த படம் போகலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். சமீபத்தில் அம்புலிக்குப் பிறகு எந்த படமும் பார்க்கவில்லை. கடந்த நான்கைந்து வாரங்களில் வெளியான எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் துளிகூட இல்லை. அரவான், கழுகு போன்ற படங்களை, பார்க்கலாமாஆஆ என்று யோசித்தால், சுடச்சுட விமர்சனங்கள் வெளியாகி அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.

வாரத்திற்கு ஒரு படம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மாதத்திற்கு ஒரு படம் என்று மாறி, இப்போது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு படம் என்ற அளவில் வந்திருக்கிறது. நாற்பதாண்டுகள் கழித்து ரிலீசாகியிருக்கும் "கர்ணன்" படம் இந்த அளவு சக்கை போடு போடுவதற்கு சரியான போட்டி இல்லாததும் ஒரு காரணம் என்றுதான் தோன்றுகிறது.





ஆயிரம் சொல்லுங்க, சச்சினின் நூறு நூறுதான்!

நூறாவது சதத்தை கடப்பதற்கு சச்சின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ, அதே அளவு சச்சினின் ரசிகனாய் நாமும் பட வேண்டியதாகிவிட்டது. நூறாவது சதம் முன்பு வரை, "99 சதம் அடித்தவருக்கு இன்னும் ஒரு சதம் அடிக்கவா தெரியாது?" என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த போட்டியில் தோற்ற பின், மறுநாள் அலுவலகத்தில் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார்கள், "சச்சின் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோத்துடும்".

சச்சின் இந்த முறை மெதுவாக ஆடினார் என்பதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் டீம் ஸ்கோரை நினைத்து பாருங்கள். 289. பங்களாதேஷுக்கு எதிராக இதனை defend பண்ண முடியவில்லை என்றால் கண்டிப்பாக குறை பெளலிங் மீதுதான். ஆனாலும் சச்சின் பெளலர்களை குறை கூறவில்லை. போட்டி முடிந்த பின் சச்சின் சொன்ன வார்த்தைகள் "Australia scored 434 but still lost to South Africa".  மேன்மக்கள்!

அதே பங்களாதேஷ் டீமை 260க்கும் குறைவான் டார்கெட் வைத்து, லீக் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வென்றது பாகிஸ்தான். கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பேட்டிங்கில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய அணி, பெளலிங்கில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அன்னை அரசு - அம்மையார் அரசு 

பத்து மாதங்கள் ஆன பின்பும், தமிழக அரசை பாராட்டும்படியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. எந்த நேரத்தில் சமச்சீர்க்கல்வி திட்டத்தில் கை வைத்தார்களோ, தொட்டதெல்லாம் "துலங்கிக்கொண்டிருக்கிறது". மின்வெட்டு பிரச்னை பற்றி எல்லோரும் பேசி, புலம்பி, திட்டி தீர்த்து இப்போது அதற்கு பழகிக்கொண்டார்கள். மணி பத்து ஆகப்போகுது..கரண்ட் கட் ஆகற நேரம். ரைட்டு, தண்ணி புடிச்சு வெச்சுடுவோம்..இதுதான் வாழ்கை முறையாக மாறிபோயிருக்கிறது.

அட மாநில அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மத்திய அரசு "வடக்கு பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊ" கதையாக இருக்கிறது. தொடர்ந்து ஊழல் வழக்குகள், பெட்ரோல் விலையேற்றம், இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் வழா வழா கொழா கொழா நிலை என்று பத்திரிக்கை தலைப்புச் செய்திகளுக்கு செம தீனி போடுகிறார்கள், கொஞ்சம் நெருப்பு அள்ளி நம் வயிற்றில் போட்டுவிட்டு.

இரண்டு அரசுகளுக்கும் சரியான மாற்று இல்லாததுதான் இன்னும் எரிச்சலாக இருக்கிறது.....:-(

சென்னையில் ஒரு வெயில் காலம்

மே மாதத்தில் காய வேண்டிய வெயில் மார்ச் மாதத்திலேயே காய்ந்து, நாம் சென்னையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. வெயிலை சமாளிக்க நான் ஃபாலோ பண்ணும் ஒரு விஷயம், அரிசி சாப்பாட்டை குறைத்துக்கொள்வது. சாப்பாட்டை குறைத்துக்கொண்டு நிறைய பழங்கள், இளநீர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வெயிலை ஓரளவு சமாளிக்க முடியும்.

எந்த கடையில் ஜூஸ் குடித்தாலும், ஐஸ் போடாமல் குடிப்பது சாலச்சிறந்தது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஐஸ் போட்டு குடிப்பது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவாது. இன்னொரு காரணம், அவ்வளவு பெரிய ஐஸ் கட்டியை எப்படி தூள் தூளாக்குகிறார்கள் என்பதை பார்த்தால் சத்தியமாக ஐஸ் போட்டு ஜூஸ் குடிக்க மனசே வராது.

Let me be myself...please!

எல்லோரும் விரும்பும்படி நடந்துகொள்வது யாருக்கும் சாத்தியமில்லை. நம்மைச் சுற்றி பத்து பேர் இருந்தால், கண்டிப்பாக இரண்டு பேருக்காவது நம் மீது கொஞ்சம் பொறாமையோ, எரிச்சலோ இருக்கக்கூடும். எட்டு பேருக்கு நம்மை பிடித்திருந்தாலும், நம்மை பிடிக்காத இரண்டு பேரின் வார்த்தைகள் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு. எனவே எல்லோருடைய விருப்பப் பட்டியலிலும் இடம் பெற வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவேன்.

இப்போது அந்த ஆட்டிட்யூட் கொஞ்சம் மாறியிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தவனாக மாற முயற்சிக்கையில், என்னுடைய தனித்தன்மையை இழப்பதை நன்றாக உணரமுடிகிறது. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோபம், அன்பு, நட்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வோர் மட்டும் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் போதும். இதை திமிராக சொல்லவில்லை. If you can't love me, please ignore me..


Thursday, March 08, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - ஏன் ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை?

4 க‌மெண்ட்ஸ்
நேற்று மதியம் சிஎன்என் சேனலில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை நேரடியாக  ஒளிபரப்பினார்கள் மிகுந்த ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற எந்த  கேட்டகரியிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று 'ராக்ஸ்டார்' இசை கேட்டதிலிருந்தே நம்பிக்கொண்டிருந்தேன். நிற்க.  நான்கைந்து  பத்திகள் கழித்து  மீண்டும்  புலம்புகிறேன்.


கன்னாபின்னாவென்று வசூலும், ஆஹா ஓஹோவென விமர்சனங்களும் வந்துவிட்டதால் வித்யா பாலனுக்கு விருது கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை. 'கான்' நடிகர்கள் இல்லாமலும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தரமுடியும் என்று நிரூபித்ததே 'டர்ட்டி பிக்சர்' டீமுக்கு பெரிய வெற்றிதான். இந்த விருது இன்னும் அவர்களை மேலும் உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

விமர்சகர்கள் கல் எறிந்தாலும், அற்புதமான  மார்க்கெட்டிங்கினாலேயே துட்டு பார்த்துவிட்ட ஷாரூக்கின் 'ரா.ஒன்', சிறந்த ஸ்பெஷல் பெக்ட்ஸ் விருதை அள்ளியிருக்கிறது. 

சிறந்த படத்தொகுப்பிற்காக 'ஆரண்ய காண்டம்' படத்திற்கும், தமிழில் சிறந்த படமாக 'வாகை சூட வா'விற்கும் விருது கிடைத்துள்ளது. இவையிரண்டும் சரியான தேர்வுதான். வித்தியாசமான கதை, மசாலா ஐட்டங்கள் ஏதுமின்றி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் என்றாலும், சிறந்த ஜனரஞ்சக படமாக 'அழகர்சாமியின் குதிரை' தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. 

ஜனரஞ்சகமான படம் என்றால் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும். வணிக ரீதியாக வெற்றி கிடைக்காததே இந்த படம் அனைவரையும் கவரவில்லை என்பதற்குச் சான்று. அதற்காக 'மங்காத்தா' படத்திற்குத்தான் இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நான் கொடுங்கோலன் அல்ல. ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால்,  'அழகர்சாமியின் குதிரை' - விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்ட படம். 

'லகான்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது. படு புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான இயக்கம், இசை ஆகியவை இருந்தாலும், ஆஸ்கர் வாங்கும் அளவுக்கு இந்த படம் வொர்த் இல்லை என்பது என் கருத்து. 

ராக்ஸ்டாருக்கு வருவோம். படத்தின் இரண்டாம் பாதி சரியான சொதப்பல் என்றாலும் சிறந்த நடிப்பிற்கான விருது ரன்பீர் கபூருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஃபில்ம்ஃபேர், அப்ஸரா, ஸ்டார் ஸ்க்ரீன் அவார்ட்ஸ், ஸீ சினி அவார்ட்ஸ் என பல விருதுகளை அள்ளினாலும், தேசிய விருது கிடைக்கவில்லை. போகட்டும், இது கூட பரவாயில்லை. ஆனால் பாடல்களை கேட்ட பின்பும், பார்த்த பின்பும், இசைக்காக ரஹ்மானுக்கும், பாடியதற்காக மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று திடமாக நம்பினேன். பில்ம்பேரில் ஆரம்பித்து ஒவ்வொரு மேடையாக ஏறி, இருவரும் விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்விருவருக்குமே தேசிய விருது கிடைக்காதது  ஒரு மிகப்பெரிய disappointment. பொதுவாக ரஹ்மானின் பாடல்களில், ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்களாவது 'சுமார்' என்ற பீலிங்கைத்தான் கொடுக்கும். இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, புல் ஃபார்மில் பட்டையை கிளப்பியிருந்தார் ரஹ்மான். 'ஜோ பி மேய்ன்' தொடங்கி 'தும் ஹோ' வரை ஒவ்வொரு பாடலும் அட்டகாசம். 




இந்த பாடலை பாருங்கள். ரஹ்மானின் இசையும், மோஹித் செளகானின் குரலும், ரன்பீர் கபூரின் நடிப்பும், நாடி நரம்பையெல்லாம் முறுக்கேற வைக்கும்! என்னை பொறுத்தவரை ஆஸ்கர் வாங்கிய 'ஜெய் ஹோ'வை விட 'சட்டா ஹக்' நூறு மடங்கு மேல். இந்த பாடலுக்கு விருது கிடைக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தேர்வு குழுவினர் இந்த பாடலை கேட்டதே/பார்த்ததே இல்லையோ? ப்ச்... என்னமோ போடா மாதவா!

Tuesday, March 06, 2012

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்

9 க‌மெண்ட்ஸ்
காந்தியை கொன்றது யார்? கோட்ஸே. அவ்வளவுதான் தெரியும் நம் தலைமுறைக்கு. யார் இந்த கோட்ஸே? காந்தியை கொல்லவேண்டும் என்று ப்ரிட்டிஷ் அரசு கூட நினைக்கவில்லை. உலகமே போற்றிய காந்தியை கொல்லவேண்டும் என்று ஏன் கோட்ஸேக்கு தோன்றியது? அப்படியென்ன அவருக்கு காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் இந்த கொலையை அவர் செய்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் பதில் சொல்கிறது. 

சும்மா போகிற போக்கில் நடந்த சம்பவங்களை பற்றி எழுதாமல், நிறைய விஷயங்களை விரிவாக அதே சமயம் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் என்.சொக்கன். சமயத்தில் அதுவே கொஞ்சம் போரடிப்பது போல தோன்றினாலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. 



காந்தி கொலைக்கு முக்கிய காரணமாக இன்றும் பலர் சொல்வது "55 கோடி". இதை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், புதிய நாட்டின் கட்டமைப்புக்கு என்று 75 கோடி தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதில் முதல் தவணையாக 20௦ கோடி பாகிஸ்தானுக்கு தரப்பட்டிருக்கிறது.

அப்போது காஷ்மீரை ஹரி சிங் என்ற அரசர் ஆண்டு வந்திருக்கிறார்.  காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம். ஆனால் ஆள்பவரோ ஹிந்து அரசர். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. பின் வழியாக வந்து தாக்குவதை கார்கிலுக்கு முன்பு அப்போதே பாகிஸ்தான் ஆரம்பித்திருக்கிறது. 

அலறியடித்துக்கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டிருக்கிறார் காஷ்மீர் அரசர். கிடைத்த வாய்ப்பை இந்தியாவும் விடவில்லை. 

இதற்கிடையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களோ, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்களுக்கு வரவேண்டிய மீதி பணத்தை அனுப்புங்கள் என்று இந்திய அரசிடம் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் இப்போதே இப்படியிருக்கிறார்கள், இன்னும் 55 கோடி கொடுத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ என்றெண்ணிய இந்திய அரசு அதை அப்படியே நிறுத்திவைத்தது.

இந்த விஷயத்தை காந்தியிடம் கொண்டுபோகும்போது அப்போதைய கவர்னர் மவுண்ட்பேட்டன் "சுதந்திரம் கிடைத்த பின் இந்தியாவின் முதல் நேர்மையற்ற செயல்" என்று குறிப்பிட, இந்த வார்த்தைகள் காந்திக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.

ஏறக்குறைய இதே சமயத்தில், ஹிந்து முஸ்லிம் கலவரம் டெல்லியில் பற்றி எரிய ஆரம்பித்திருந்த நேரம். இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி காந்தி ஜனவரி 13, 1948 காலை 11:55க்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். பதறி போன இந்திய அரசு, தனது கேபினட் கூட்டத்தை காந்தி உண்ணாவிரதமிருந்த பிர்லா இல்லத்திலேயே கூட்டியிருக்கிறார்கள். காந்தி நேரடியாக கேட்கவில்லை. இருந்தாலும் அவரை திருப்திபடுத்தி உண்ணாவிரதத்தை கைவிட கேபினட் கூட்டம் செய்த முதல் முடிவு, பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுத்துவிடலாம்.


நாதுராம் கோட்ஸே

இதுதான் தீவிர ஹிந்துத்வாவான கோட்ஸேவை மிகுந்த கோபமடையச் செய்திருக்கிறது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். ஹிந்துக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. அவர் செத்தொழிந்தால்தான் இந்தியாவுக்கு நிம்மதி. அப்போதுதான் இந்தியா தன் வளர்ச்சியை பற்றி யோசிக்க முடியும். இனி பொறுத்துபோக முடியாது. ஜனவரி 20௦, 1948. நாள் குறித்தாயிற்று.

கொலை திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ஏழு பேர் (இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்).

1. நாராயண் ஆப்தே 
2. நாதுராம் கோட்ஸே 
3. விஷ்ணு கார்கரே
4. மதன்லால் பாஹ்வா 
5. கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி)
6. திகம்பர் பாட்ஜே
7. ஷங்கர் கிஸ்தைய்யா

ஜனவரி 20௦, 1948 அன்று ஆப்தேவும், கோட்ஸேவும் பிர்லா இல்லத்துக்கு மற்றவர்களோடு சென்றார்களே தவிர, காந்தியை கொலை செய்ய நேரடியாக முயற்சிக்கவில்லை. திட்டம் போட்டது மட்டுமே அவர்கள் வேலை. 

பிரார்த்தனை மைதானத்திற்கு சற்று தொலைவில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கவைப்பார். கூட்டம் சிதறி ஓடும். காவலர்கள் கவனம் சிதறும். இந்த சமயத்தில் திகம்பர் பாட்ஜே காந்தியை அருகிலிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து சுடவேண்டும். சரியாக போட்ட ப்ளானில் கடைசியில் சொதப்பியது திகம்பர் பாட்ஜே. குண்டு வெடித்தபின் அவர் காந்தியை சுடவில்லை. ஆப்தே - கோட்ஸே குழுவினருக்கு இது பேரிடி! போதாதற்கு மதன்லால் போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

இந்த தோல்வியை ஆப்தே மற்றும் கோட்ஸேவால் தாங்கமுடியவில்லை. இனி மற்றவர்களை நம்பி பிரயஜோனமில்லை. நேரடியாக களத்தில் இறங்க வேண்டியதுதான். முடிவெடுத்தார் கோட்ஸே. விளைவு - ஜனவரி 30௦, 1948.

I do say that my shots were fired at the person whose policy and action had brought rack and ruin and destruction to millions of Hindus. There was no legal machinery by which such an offender could be brought to book and for this reason I fired those fatal shots. I bear no ill will towards anyone individually, but I do say that I had no respect for the present government owing to their policy, which was unfairly favourable towards the Muslims. But at the same time I could clearly see that the policy was entirely due to the presence of Gandhi.
— Nathuram Godse, Answer to the Charge Sheet (Excerpt from Para. 135)




இதில் கொடுமை என்னவென்றால், ஜனவரி 20௦லிருந்து 30௦ வரை போலீசின் நடவடிக்கை  படு மெத்தனமாக இருந்திருக்கிறது. மதன்லாலை தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் கொலை நடந்த இரண்டு வாரங்களுக்குள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து ஏழு பேரையும் கைது செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேவுக்கும், ஆப்தேவுக்கும் மரண தண்டனை. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை. அப்ரூவராக மாறிய திகம்பர் பாட்ஜேவுக்கு விடுதலை!

சொக்கன் அவர்கள் எழுத்தில் அறிஞர் அண்ணா, திருபாய் அம்பானி, பில் கேட்ஸ் ஆகியோரின் வாழ்கை வரலாற்றை வாசித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இதுவரை அவர் எழுதியதிலேயே இந்த புத்தகம்தான், த பெஸ்ட்!


பெயர்: மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர்: என். சொக்கன்
விலை: ரூ.135/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html


Tuesday, February 28, 2012

அம்புலி 3D

6 க‌மெண்ட்ஸ்
முதல் பத்து நிமிடங்களிலேயே டெக்னிக்கலாக தாங்கள் எடுத்திருக்கும் சிரத்தையையும், இந்த படம் எந்த மாதிரியான களனை கொண்டது என்பதையும், பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி ஷங்கரும். குழந்தைகளுக்கு மட்டும்தான் முப்பரிமாண படம் என்பதை மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரிக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவே ஒரு சோளக்காடு இருக்கிறது. அதில் அம்புலி என்றொரு மிருகம் வசித்து வருவதாகவும், அது மனிதர்களை கண்டால் கொன்றுவிடுவதாகவும் வதந்தி பரவியிருக்க, அதனை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள் கல்லூரி மாணவர்கள் அஜய்யும், ஸ்ரீஜித்தும். அம்புலி என்பது உண்மைதானா? அதனை இவர்கள் கண்டுபிடித்தார்களா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 




லீட் ரோலில் இருவர் நடித்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் சதீஷ்தான் படத்தின் நிஜமான நாயகன் என்று சொல்வேன். 3டியில் ஒரு அட்டகாசமான அனுபவத்தை தருகிறார் சதீஷ். சோளக்காடு வழியே நம்மை பயணிக்க வைப்பதும், துப்பாக்கியை எடுத்து நம் மீது குறி பார்ப்பதும், கண் அருகே பாம்பு வருவதும் என ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். படத்தின் ஜானருக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைந்திருப்பதும் படத்துக்கு பெரிய பலம். 

படத்தின் குறைகள் என்றால், பாடல்களும், காதல் காட்சிகளும்தான். பார்க்கும்போது நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், இரு ஜோடிகளும் ஆடும் பாடல் படத்தின் வேகத்திற்கு வேகத்தடையாகத்தான் தோன்றியது எனக்கு. கல்லூரி காதல் என்பதால் இன்னும் கொஞ்சம் க்யூட்டாக இருந்திருக்கலாம். "ரோமியோ ஜூலியட் காலத்திலிருந்தே ஹீரோயின் ரூம் மாடியிலதான்" போன்ற வசனம் 'அட!' போடவைத்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீல்.

மற்ற எல்லோரையும் விட எனக்கு கலைராணி, ஜெகன் மற்றும் தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. கிராமத்து  மருத்துவச்சியாக அம்புலியின் மர்மம் அறிந்த பாட்டியாக நடித்திருக்கிறார் கலைராணி. பாட்டி என்பதால் கன்னாபின்னாவென்று மேக்கப் போடாமல், அளவான மேக்கப்போடு இயல்பாக அவரை காண்பித்ததே நன்றாக இருந்தது.

1970௦களில் நடக்கும் கதை என்பதால், ஒரு திராவிடர் கழக கேரக்டரை ஜெகன் மூலம் உலவவிட்டிருக்கிரார்கள். சட்டையையும், ஒரு சில வசனங்களையும் வைத்தே அவர் கேரக்டரை புரியவைப்பது இயக்குனர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்று. ஜெகனும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஒரு அப்பாவின் பயத்தையும், பாசத்தையும், காமெடியுடன் கூடிய குணச்சித்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் தம்பி ராமையா.

க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டாம் பாதியில் சரசரவென்று நகரும் திரைக்கதைதான் அதையெல்லாம் மறக்கச்செய்து பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது. 


இணையதளங்களையும், பர்மா பஜார்களையும் பார்த்து 'பைரஸி பைரஸி' என்று கத்திக்கொண்டிருந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு, 3டி மூலம் ஒரு கோடு போட்டு காண்பித்துள்ளார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் ஹரி ஷங்கர். பார்ப்போம், அடுத்து யார் ரோடு போடுகிறார்கள் என்று...

Wednesday, February 15, 2012

பஸ் டே கொண்டாட்டம் - இத நிறுத்துங்க முதல்ல!

8 க‌மெண்ட்ஸ்
யார் இந்த கண்றாவியை கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறுகிறது பஸ் டே கொண்டாட்டம் பற்றிய செய்திகள். தங்களது கல்லூரியின் வழித்தடத்தில் ரெகுலராக வரும் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் கெளரவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த பஸ் டே கொண்டாட்டம், கடந்த சில வருடங்களாக ஒரு அருவருப்பான விஷயமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது. 

கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரிக்கென்று சொந்தமாக பஸ் வாங்கி, கல்லூரி மைதானத்திலேயே கொண்டாட வேண்டியதுதானே. அதென்ன மாட்னான் இளிச்சவாயன் என்பது போல் அரசு பேருந்துகளை எடுத்துகொண்டு அண்ணா சாலையில் ஆட்டம் போடுவது? இதற்கெல்லாம் அனுமதி கொடுத்து, பேருந்தும் கொடுத்து அனுப்புகிறார்களே..அவர்களை சொல்லவேண்டும். 

சென்ற வாரம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட தீர்மானித்து கோயம்பேட்டில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, போலீசார் அவர்களை அங்கேயே நிறுத்திவிட, இந்த so-called மாணவர்கள் கடுப்பாகிவிட்டார்கள். பின்பு அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த கும்பல்கள் ஒன்று கூடி எதிர்ப்பை காட்ட முடிவு செய்திருக்கிறது. விளைவு? கல்லூரி வளாகத்தில் இருந்துகொண்டு சாலையில் கண்டபடி கல் எறிந்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் ஒருவரும், பயணி ஒருவரும் இதில் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

குழந்தை மீது கற்கள் படாமல் தாயிடம் சேர்க்கும் காவலர்



இந்த சம்பவத்திற்கு பின் சில மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த வழக்கு கொஞ்ச நாளுக்கு இழுத்து, கொஞ்சம் ஃபைனும், நீதிபதியின் அறிவுரை கலந்த கண்டனத்தோடும் இந்த மாணவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

ஆனால் இவர்கள் வெளியே வருவதற்குள் இவர்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைகளையும், அவமானங்களையும்  தாங்க  வேண்டி இருக்கும். இதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருந்தால், எந்த ஒரு மாணவனும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேமாட்டான். ஹீரோயிசத்தை காட்டுவதற்கு வாழ்வில் எவ்வளவோ பாஸிட்டிவான வழிகள் இருக்கும்போது, ஒரு விலங்கு மாதிரி கூரையில் ஆடுவதெல்லாம் எதற்கு? பரிணாம வளர்ச்சியை சாலையில் செல்பவர்களுக்கு நினைவூட்டுவதற்கா?

இதற்கு சரியான நிரந்தர தீர்வு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்வதுதான். எதற்கோ கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவது, அவரை வீட்டை விட்டு அனுப்புவது, இவர் மேல் கேஸ் போடுவது, சட்டசபையில் நேருக்கு நேர் சவால் விடுவது  என்று எதிலெதிலோ வீரத்தை காட்டும் இந்த அரசு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்தால் அதை கண்டிப்பாக பலரும் வரவேற்பார்கள். முடிவு தமிழக அரசி(யி)ன் கையில்!

Friday, February 10, 2012

பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்பு

15 க‌மெண்ட்ஸ்
சென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. ப்ளீஸ், கொஞ்சம் மாத்திகோங்கப்பா!

ஆரம்பத்தில் ப்ளாக் மீது ஒரு போதை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில் நடந்த சில நிகழ்வுகளினாலேயே போதை குறைந்து ஒரு "ச்சே" பீலிங் வந்துவிட்டது. பிரபல பதிவர்களுக்கு நன்றி. இப்போதெல்லாம் எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் எழுதுகிறேன் :)

பிரபலங்களிலும் ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் வரிசையில், கண்டிப்பாக 'வீடு திரும்பல்' மோகன்குமார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. எளிமையாக, டீசன்ட்டாக எழுதுவதினாலேயே இவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். 

சில நாட்கள் முன் புத்தக கண்காட்சியின்போது வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதியபோது, தலைவர் புத்தகங்களை exchange பண்ணிக்கலாமா என்று கேட்டிருந்தார். தலைவர் எழுத்து பலரிடம் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எனவே நான்கு புத்தகங்களை அவருக்கு தபாலில் அனுப்பிவிட்டேன். அவர் அத்துடன் விடவில்லை. "என்னிடம் சில புத்தகங்கள் இருக்கிறது. ஒரே ஏரியாவில் இருந்துகொண்டு சந்திக்காமலேயே இருக்கிறோம், நேரில் வாங்க சந்திப்போம்" என்றார்.

நெருங்கிய நண்பர்கள் அருகில் இருக்கும்போதுதான் அரட்டையில் அரண்மனை கட்டி விளையாடுவேன். புதிதாக சந்திப்பவர்களோடு நான் அதிகம் பேசுவதில்லை. இது என் இயல்பான சுபாவமே தவிர நான் ஏன் பேசவேண்டும், வேண்டும் என்றால் அவர்கள் பேசட்டுமே என்ற ஈகோ அல்ல. மோகன் அழைத்தவுடன், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மதியம் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். சரியாக மதியம் பன்னிரண்டரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி பன்னிரண்டரை. நாம எப்போ சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிருக்கிறோம்?




வீட்டிலிருந்து அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு வெறும் பத்து நிமிட தூரம்தான். எனவே ஒருவழியாக சமாளித்துவிட்டேன். நேரில் சந்தித்தபோது ரொம்ப கேஷுவலாக பேசினார். தனி கேபின், அழகான சுத்தமான டேபிள், பக்கத்தில் அவரின் துறை சம்பந்தமான பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என்று தடிமனான சில புத்தகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு எம்.டி லுக்கில்தான் இருந்தார். பேச்சின் போது நடுநடுவே சிலர்  ஃபோன் செய்து சில கேள்விகள் கேட்க, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். "போனை எடுத்தா நச்சு நச்சுன்றானுங்கப்பா" என்று கவுண்டர் மாதிரி அலுத்துக்கொள்ளவில்லையே தவிர, சார் நிஜமாவே பிஸிதான்!

எப்படி சமீப நாட்களில் நிறைய எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். சொன்னார். ம்ம்.....அது ஆஃப் த ரெக்கார்டாகவே இருக்கட்டும். சில புத்தகங்களை தந்து எது வேணுமோ எடுத்துகோங்க என்றார். கிளி கழுத்தை கண்ட அர்ஜுனன் போல் நான் தலைவரின் கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவருடைய சமீபத்திய பயணம், என்னுடைய வொர்க் டைமிங், பதிவர்கள் சந்திப்பு, சத்யம் தியேட்டர் என்று டாபிக் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தோம். வேளச்சேரியில் புதிதாக வரப்போகும் திரைஅரங்குகள் பற்றி சொன்னார். நான்தான் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசினாலும் ரொம்ப  ஃபார்மலாகத்தான் பேச முடிந்தது. முதன் முறை சந்திப்பதினால் இருக்கும் சிறு தயக்கம். மேலும் சில சந்திப்புகளில் கொஞ்சம் இயல்பாக பேசுவேன் என்று நம்புகிறேன்.

வயிற்றுக்கு ஈயும் நேரம் வந்ததால், ஏற்கனவே பேசிவைத்தபடி இருவரும் தலப்பாகட்டி'னோம். ஒரு கோழியை கொன்ற பாவத்தை அக்கவுன்ட்டில் ஏற்றிகொண்ட பிறகு விடைபெற்றேன். ஒரு பந்தா இல்லாத, பழகுவதற்கு எளிமையான, கண்ணியமான மனிதரை சந்தித்தோம் என்ற திருப்தி கிடைத்தது. விரைவில் மேலும் சில புத்தகங்களோடு மீண்டும் சந்திப்போம் மோகன்.

 
footer